சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா

சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா

திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவில் மே 9ம் தேதி இசை நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் காஞ்சி சுவாமிகள் திருவாரூர், ஏப். 27– திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா வரும் மே 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை திருவாரூரில் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மே 9ம் தேதி மாலை நடைபெறும் இசை நிகழ்ச்சியை காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து அருளாசி வழங்குகிறார் என்றும் ஜெயந்தி விழா குழு தலைவரும், தினமலர் ஆசிரியருமான முனைவர் ஆர்.ராமசுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மும்மூர்த்திகளின் ஜெயந்தி வைபவ நன்னாளில் நடைபெறுவது வழக்கம். அதன்படியே 2019ம் ஆண்டும் விழாவை சிறப்பாக நடத்த உரிய ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு, அதற்கென தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி மே 6ம் தேதி சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி வைபவத்தை முன்னிட்டு அவரது அவதார இல்லத்தில் சிறப்பு பூஜையும், இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை முதல் 8ம் தேதி வரை சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் அவதார இல்லத்தில் தினசரி இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 9ம் தேதி மாலை திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாம்பாள் சன்னதி எதிரே சங்கீத மும்மூர்த்திகள் அரங்கில் இசை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. நிகழ்ச்சியை காஞ்சி பெரியவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் காணொலி காட்சி மூலம் அருளாசி வழங்கி தொடங்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து மே 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

11ம் தேதி காலை நுாற்றுக்கணக்கான சங்கீத வித்வான்கள் கலந்து கொண்டு இசைக்கும் பஞ்ச ரத்ன இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு சங்கீத மும்மூர்த்திகளின் விக்கிரஹ ஊர்வலம் நடக்கிறது. இதை வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்து அருளுரை ஆற்றுகிறார். விழாவில் திருவாரூர் தியாகராஜர் கோயில் நிர்வாக அதிகாரி கவிதா மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Add Comment

Your email address will not be published. Required fields are marked *